உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியின் பெயரைப் பரிந்துரைத்துள்ளார் விரைவில் ஓய்வு பெறவுள்ள தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்.
2016-ல் இருந்து உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த டி.ஒய். சந்திரசூட், கடந்த 9 நவம்பர் 2022-ல் உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். 2 வருடங்களாக இந்தப் பொறுப்பில் இருந்துவரும் சந்திரசூட்டின் பதவிக்காலம் வரும் நவம்பர் 11-ல் முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில் தனக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க, மூத்த நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பெயரைப் பரிந்துரைத்துள்ளார் சந்திரசூட். சந்திரசூட்டின் இந்தப் பரிந்துரையை முதலில் மத்திய சட்ட அமைச்சகம் பரிசீலிக்கும், அதன்பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு இந்தப் பரிந்துரை அனுப்பி வைக்கப்படும்.
குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்பார். அதன்பிறகு 6 மாதங்கள் தலைமை நீதிபதி பொறுப்பில் இருக்கவுள்ள சஞ்சீவ் கண்ணா, 13 மே 2025-ல் ஓய்வு பெறுவார். தற்போது தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல் தலைவர் பொறுப்பையும் கூடுதலாக வகித்துவருகிறார் நீதிபதி சஞ்சீவ் கண்ணா.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருக்கும் நபர்கள், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் வரிசையில் தங்களுக்குப் பிறகு 2-வது இடத்தில் இருக்கும் மூத்த நீதிபதியின் பெயரை, புதிய தலைமை நீதிபதி பொறுப்புக்கு பரிந்துரைப்பது மரபாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.