ANI
இந்தியா

கைவிடப்பட்ட கிராமத்தில் நள்ளிரவில் தவித்த தலைமை தேர்தல் ஆணையர்!

கடினமான நிலப்பரப்பைக் கொண்ட வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து நேரடியாக தெரிந்துகொள்ளும் நோக்கில் இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டார்.

ராம் அப்பண்ணசாமி

மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டரால், தலா இரு விமானிகள் மற்றும் அதிகாரிகளுடன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஓர் கைவிடப்பட்ட கிராமத்தில் நேற்று இரவு முழுவதும் தங்கியுள்ளார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.

சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ளது உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் பகுதி. காடுகளைக் கொண்ட மலைப்பாங்கான பகுதியான பித்தோராகரில் உள்ள தொலைதூர வாக்குச்சாவடி மையங்களைப் பார்வையிட, நேற்று (அக்.16) மாலை முன்சியாரியில் இருந்து பித்தோராகரின் மிலம் கிராமத்தை நோக்கி ஹெலிகாப்டரில் புறப்பட்டார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.

கடினமான நிலப்பரப்பைக் கொண்ட உயரமான பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து நேரடியாக தெரிந்துகொள்ளும் நோக்கில் இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டார்.

இந்தப் பயணத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள ஜோஹர் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்த கடைசி கிராமமான மிலம் மற்றும் அதைச் சுற்றி உள்ள 13 கிராமங்களில் இருக்கும் வாக்குச்சாவடி மையங்களைப் பார்வையிட ராஜீவ் குமார் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் ராஜீவ் குமார் பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக ரலம் என்ற கிராமத்துக்கு அருகே தரையிறங்கியது. இதனால் ஹெலிகாப்ரில் பயணித்த ராஜீவ் குமார், உத்தரகண்ட் மாநில கூடுதல் தேர்தல் அலுவலர் விஜய் குமார், அவரது தனி உதவியாளர் நவீன் குமார், 2 விமானிகள் என இந்த 5 நபர்களும் நேற்று இரவு முழுவதும் ரலம் கிராமத்தில் தங்கியுள்ளனர்.

இந்த ரலம் கிராமத்தில் மொத்தம் 28 வீடுகள் உள்ளன. ஆனால் இங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை. இதைத் தொடர்ந்து வானிலை சீரடைந்ததும் இன்று அதிகாலை ஹெலிகாப்டரில் கிளம்பிய இந்தக்குழு மீண்டும் முன்சியாரியைச் சென்றடைந்தது.