இந்தியா

சென்னை மெட்ரோ ரயில்: நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

“தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது ஏற்கப்பட்டுள்ளது”.

யோகேஷ் குமார்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தில்லியில் கடந்த செப்.27 அன்று பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

அதில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்காக இதுவரை ரூ. 18,564 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் நிதி இதுவரை வழங்கப்படவில்லை. எனவே தாமதமின்றி நிதியை வழங்குமாறு கேட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்காக ரூ. 63,246 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “எங்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது ஏற்கப்பட்டுள்ளது, இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.