இந்தியா

தெலங்கானாவில் ரசாயன ஆலை வெடித்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு?

"இதுவரை உடல்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன."

கிழக்கு நியூஸ்

தெலங்கானாவில் ரசாயன ஆலை வெடித்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி வருகின்றன.

தெலங்கானாவில் மேடக் மாவட்டத்தில் சிகாச்சி ரசாயன ஆலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ரசாயன ஆலையில் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. தாகத் தெரிகிறது. விபத்துக்கான காரணம் குறித்தும் இதுவரை அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், ரியாக்டர் வெடித்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. வெடிவிபத்து நிகழ்ந்தவுடன் ஆலையிலிருந்து உடனடியாக வெளியேறத் தொடங்கினார்கள். இருந்தாலும், சிலர் இதில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள், பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு வருகின்றன. எனினும், அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதுவரை உடல்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.

தெலங்கானா தீயணைப்புத் துறையினர் விபத்து குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"சிகாச்சி மருந்து நிறுவனத்தில் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. ஏறத்தாழ 15 முதல் 20 பேர் காயமடைந்துள்ளார்கள். மேற்கொண்டு தகவல்கள் வெளிவரும்" என்றார்கள்.