ANI
இந்தியா

பிரதமர், முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்க மசோதாக்கள்: மக்களவையில் இன்று தாக்கல்! | Amit Shah

எதிர்க்கட்சி முதல்வர்களைக் கைது செய்ய பாரபட்சமான மத்திய அமைப்புகளை கட்டவிழ்த்து விடுவது, எதிர்க்கட்சிகளை நிலைகுலைய வைப்பதற்கான சிறந்த வழி ஆகும்.

ராம் அப்பண்ணசாமி

பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில அல்லது யூனியன் பிரதேச முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தொடர்ந்து 30 நாள்கள் சிறையில் இருக்கும் பட்சத்தில் அவர்களை 31-வது நாளில் பதவி நீக்கம் செய்யும் மூன்று சர்ச்சைக்குரிய மசோதாக்கள் இன்று (ஆக. 20) மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளன.

யூனியன் பிரதேசங்கள் அரசு (திருத்தம்) மசோதா 2025, அரசியலமைப்பு (நூற்று முப்பதாவது திருத்தம்) மசோதா 2025, மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா 2025 - ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்கிறார்.

கூடுதலாக, இந்த மசோதாக்களை கூட்டு நாடாளுமன்றக் குழுவின் ஆய்விற்கு அனுப்புவதற்கான தீர்மானத்தையும் மக்களவையில் அமித்ஷா கொண்டு வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரம், ஆளும் பாஜக அரசால் முன்மொழியப்படும் இந்த மூன்று சட்ட திருத்தங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடுமையான ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளன.

பாஜக அல்லாத மாநில அரசுகளை சீர்குலைக்க மத்திய அரசு இந்த சட்டங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதலமைச்சர்களை `சார்புடைய’ மத்திய அமைப்புகளால் `தன்னிச்சையான’ முறையில் கைது செய்து, விரைவில் பதவியில் இருந்து நீக்க இந்த திருத்தங்கள் வழிவகை செய்வதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான அபிஷேக் மனு சிங்வி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

`எதிர்க்கட்சி முதல்வர்களைக் கைது செய்ய பாரபட்சமான மத்திய அமைப்புகளை கட்டவிழ்த்து விடுவதும், தேர்தல் முறையில் அவர்களைத் தோற்கடிக்க முடியாவிட்டாலும் தன்னிச்சையான கைதுகள் மூலம் அவர்களை அகற்றுவதும் எதிர்க்கட்சிகளை நிலைகுலைய வைப்பதற்கான சிறந்த வழி ஆகும்!!’ என்று கூறப்பட்டுள்ளது.