இந்தியா

ஆந்திர முதல்வராகப் பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு!

ராம் அப்பண்ணசாமி

நான்காவது முறையாக இன்று ஆந்திர பிரதேச மாநில முதல்வராகப் பதவியேற்றார் தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு. சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர மாநில ஆளுநர் அப்துல் நசீர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலை, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி மற்றும் பாஜக ஆகியவை கூட்டணி அமைத்துச் சந்தித்தன. ஜுன் 4-ல் நடந்த வாக்கு எண்ணிக்கையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 135 இடங்களும், ஜன சேனாவுக்கு 21 இடங்களும், பாஜகவுக்கு 8 இடங்களும் கிடைத்தன.

175 இடங்களைக் கொண்ட ஆந்திர சட்டமன்றத்தில், 164 இடங்களுடன் தெலுங்கு தேசம் கூட்டணிக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைத்த நிலையில், முதல்வராகப் பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு.

விஜயவாடாவில் நடந்த இந்தப் பதவியேற்பு விழாவில், ஜன சேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் ஆகியோர் ஆந்திர மாநில அமைச்சர்களாகப் பதவியேற்றார்.

1995-1999, 1999-2004 ஆகிய இரண்டு முறை ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதலமைச்சராகவும், தெலுங்கானா பகுதி தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட பிறகு நடந்த தேர்தலில் வென்று 2014-2019 வரை அந்திர மாநிலத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் சந்திரபாபு நாயுடு.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், நடிகருமான என்.டி.ஆரின் மகள் புவனேஸ்வரியைத் திருமணம் செய்துள்ளார் சந்திரபாபு நாயுடு. புவனேஸ்வரியின் அக்கா புரந்தேஸ்வரி தற்போதைய ஆந்திர மாநிலத்தின் பாஜக தலைவராக உள்ளார்.

ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரஜினிகாந்த், சிரஞ்சீவி மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் இந்தப் பதவியேற்பு விழாவில் பங்கேற்றுள்ளனர்.