மிகவும் அரிதான, அதே நேரம் ஆபத்தான சண்டிபுரா வைரஸ் தொற்று குஜராத் மாநிலத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது. குஜராத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி சமீபத்தில் உயிரிழந்ததுக்கு சண்டிபுரா வைரஸ் தொற்றுதான் காரணம் என்று மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் இன்று (ஜூலை 17) அறிவித்துள்ளது.
இதை அடுத்து, `தற்போதைய நிலவரப்படி 15 மரணங்கள் எங்களின் கவனத்துக்கு வந்துள்ளன. இதில் 4 வயது சிறுமியின் மரணத்துக்குக் காரணம் சண்டிபுரா வைரஸ் தொற்று என்பது உறுதியாகியுள்ளது. நோய்த் தொற்று ஏற்பட்டுள்ள 29 நபர்களுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்படுவதால் இதற்குக் காரணம் ஒரே நோய்த் தொற்று என்பது உறுதியாகியுள்ளது’ என்று அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, குஜராத்தின் சபர்கந்தா, ஆரவள்ளி, அகமதாபாத், ராஜ்கோட், மெஹ்சானா, மோர்பி, பஞ்ச்மஹால் ஆகிய மாவட்டங்களில் சண்டிபுரா வைரஸ் தொற்று பரவியுள்ளது. பதிவாகியுள்ள 15 மரணங்களில் 13 குஜராத்தில் இருந்தும், தலா ஒரு மரணங்கள் அண்டை மாநிலங்களான மத்திய பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் பதிவாகியுள்ளன.
கொசுக்கள், மணல் ஈக்கள் போன்றவை சண்டிபுரா வைரஸ் தொற்று பரவ முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. வடக்கு குஜராத்தில் இருக்கும் வெப்பநிலை மணல் ஈக்கள் இனப்பெருக்கத்துக்கு சாதகமாக இருக்கிறது. சண்டிபுரா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களுக்குக் காய்ச்சலும், கடுமையான தலைவலியும், உடல் சோர்வும் உண்டாகும்.
மேலும் இந்தத் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களுக்கு மூளை வீக்கமடையும் அபாயமும் உண்டு. 15 வயதுக்குக் குறைவான சிறார்களுக்கு வைரஸ் தொற்றை எதிர்க்கும் அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அவர்கள் இந்தத் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
2003 முதல் 2004 வரை மத்திய இந்தியாவில் சண்டிபுரா வைரஸ் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டனர். அப்போது இந்த நோய்த் தொற்றால் ஏற்பட்ட இறப்பு விகிதம் 56-75 சதவீதம் வரை இருந்தது.