இந்தியா

உ.பி.யில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: 4 பயணிகள் உயிரிழப்பு

ராம் அப்பண்ணசாமி

உத்தர பிரதேச மாநிலத்தின் கோண்டா பகுதியில் இன்று (ஜூலை 18) மதியம் 2.30 மணி அளவில் சண்டிகர்-திப்ருகர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

நேற்று (ஜூலை 18) இரவு 11.35 மணி அளவில் சண்டிகரிலிருந்து அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர் நோக்கிக் கிளம்பியது சண்டிகர்-திப்ருகர் விரைவு ரயில் (15904). இந்நிலையில் இன்று மதியம் 2.30 மணி அளவில் உத்தர பிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள ஜிலாஹி மற்றும் கொசாய் திஹ்வா ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சண்டிகர்-திப்ருகர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விரைவு ரயிலின் 4 ஏசி பெட்டிகள் உள்ளிட்ட 12 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 4 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரயில் விபத்தால் அந்தக் குறிப்பிட்ட ரயில் தடத்தில் செல்லவிருந்த பல ரயில்கள் வேறு வழியில் இயக்கப்பட்டன.

உத்தர பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் ரயில் விபத்து சம்பவம் நடந்த இடத்தில் உடனடியாக மீட்புப் குழுவினரை அனுப்ப உத்தரவிட்டுள்ளார் என்று உ.பி முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்த தகவல்களை அறிந்து கொள்ள அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூன் 17-ல் மேற்கு வங்கத்தின் டார்ஜீலிங் மாவட்டத்தில் உள்ள ரங்காபாணி ரயில் நிலையத்துக்கு அருகில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் சரக்கு ரயில் ஓட்டுனர் உள்ளிட்ட 11 பயணிகள் உயிரிழந்தனர், 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.