மக்கள் குறைதீர் கூட்டத்தில் தில்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று (ஆக. 20) தாக்குதலுக்கு உள்ளான நிலையில், அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தில்லி முதல்வர் ரேகா குப்தா தனது இல்லத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டத்தை நடத்தினார். குஜராத்தைச் சேர்ந்த ராஜேஷ் சக்ரியா என்பவர் புகார் மனு அளிக்க அங்கு வருகை தந்திருந்தார். முதல்வரிடம் மனு அளித்த சக்ரியா அவரிடம் சிறிது நேரம் பேசியுள்ளார்.
பின்னர் திடீரென முதல்வரை திட்டிவிட்டு அவரது கன்னத்தில் சக்ரியா அறைந்துள்ளார். அதன்பிறகு அவரை கீழே தள்ளிவிட்டுவிட்டு அவரது தலைமுடியை பிடித்து இழுத்துள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட அருகிலிருந்த காவலர்கள் சக்ரியாவை மடக்கிப்பிடித்து அழைத்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து சக்ரியா கைது செய்யப்பட்டு, அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக முதல்வர் இல்லம் மற்றும் அதை சுற்றியிருந்த சிசிடிவிகளில் பதிவான காட்சிகள் ஆராயப்பட்டன. முதல்வர் இல்லம் அமைந்துள்ள பகுதிக்கு முந்தைய நாளே சக்ரியா வருகை தந்து நோட்டமிட்டு, கைபேசியில் வீடியோ பதிவு செய்துள்ளது தெரிய வந்தது.
இந்நிலையில், ரேகா குப்தாவிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று (ஆக. 21) காலை முதல்வரின் இல்லத்திற்கு வருகை தந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்கள், முதல்வரின் பாதுகாப்புப் பணிக்கான பொறுப்பை ஏற்றனர். மேலும், முதல்வரின் இல்லத்தை சுற்றி கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.