இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) மற்றும் இந்திய ரயில்வே நிதி கழகம் (ஐஆர்எஃப்சி) ஆகிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்க ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு.
மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் நவரத்னா, மஹாரத்னா, மினி ரத்னா – 1 மற்றும் மினி ரத்னா – 2 என வகைப்படுத்தப்பட்டுள்ளன. வருடாந்திர வருவாய், நிகர லாபம், சொத்து மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பொதுத்துறை நிறுவனங்கள் இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில், மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு கீழ் இயங்கும் ஐஆர்சிடிசி மற்றும் ஐஆர்எஃப்சி ஆகிய இரண்டு பொதுத்துறை நிறுவனங்களுக்கு இதுவரை மஹாரத்னா அந்தஸ்தில் இருந்து வந்தன. இந்நிலையில், இவை இரண்டிற்கும் நவரத்னா அந்தஸ்து அளிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிதி நிலைமை ஆகியவற்றை கருத்தில்கொண்டு இந்த பொதுத்துறை நிறுவனங்களின் அந்தஸ்து உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை 24 நவரத்னா பொதுத் துறை நிறுவனங்கள் இருக்கும் நிலையில், ஐஆர்சிடிசியும், ஐஆர்எஃப்சியும் 25 மற்றும் 26-வது பொதுத்துறை நிறுவனங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இதன் மூலம், மத்திய அரசின் ஒப்புதல் இன்றி ரூ. 1,000 கோடி வரையிலான முதலீட்டு திட்டங்களை இந்த பொதுத்துறை நிறுவனங்களால் செயல்ப்படுத்த முடியும்.
கடந்த 2023-24 நிதியாண்டில் ரூ. 4,270.18 கோடி வருவாய் ஈட்டியது ஐஆர்சிடிசி. மேலும், நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டில் (அக் 2024 - டிச 2024) ரூ. 341 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முன்றைய நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ. 300 கோடி நிகர லாபமாக இருந்தது. இன்றைய பங்குச் சந்தை நிலவரப்படி ஐஆர்சிடிசி பங்கு ஒன்றின் விலை ரூ. 677.8 ஆகவும், ஐஆர்எஃப்சி பங்கு ஒன்றின் விலை ரூ. 111.6 ஆகவும் உள்ளன.