ANI
இந்தியா

விவசாயத்திற்கு பயன்படுத்தும் நீருக்கு வரியா?: மத்திய அரசு விளக்கம்

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், `விவசாயம்’ மற்றும் `நீர்’ ஆகிய இரண்டுமே மாநிலப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ராம் அப்பண்ணசாமி

விவசாய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் நீருக்கு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான சமூக ஊடக பதிவுகள் மற்றும் செய்திகள் குறித்து மத்திய ஜல்சக்தி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

நிலத்தடி நீர் வீணாவதையும், தவறாகப் பயன்படுத்துவதையும் தவிர்க்கும் வகையில் விவசாய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் நீருக்கு மத்திய அரசு வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியானது. இதை முன்வைத்து பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,

`மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ள புதிய திட்டத்தின் கீழ், விவசாயிகள் தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் செலுத்தவேண்டும் என்று சில ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டுள்ளதாக ஜல் சக்தி அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.

கேள்விக்குள்ளான அந்த புதிய `பகுதிசார் மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மையை நவீனமயமாக்குதல் (M-CADWM)’ திட்டம், பிரதம மந்திரி விவசாய பாசன திட்டத்துடன் (PMKSY) தொடர்புடையது என்பதை ஜல் சக்தி அமைச்சகம் திட்டவட்டமாக தெளிவுபடுத்த விரும்புகிறது.

நீர்ப்பாசன செயல்திறனை மேம்படுத்துதல், சமமான நீர் விநியோகத்தை உறுதி செய்தல் மற்றும் நீர் மேலாண்மை மற்றும் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக அழுத்தப்பட்ட குழாய் நெட்வொர்க்குகள், ஐஓடி (IoT) சாதனங்கள் மற்றும் ஸ்காடா (SCADA) சாதனங்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை ஊக்குவித்தல், போன்றவற்றை (மட்டுமே) இந்த புதிய திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், விவசாய பயன்பாட்டிற்கான நீர் மீது பயனர் கட்டணங்களை விதிக்க மத்திய அரசால் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், ​​இந்த விவகாரத்தை ஊடகத்தினர் பலமுறை எழுப்பியபோது, ஜல்சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெளிவுபடுத்தினார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், `விவசாயம்’ மற்றும் `நீர்’ ஆகிய இரண்டுமே மாநில பட்டியலில் இடம்பெற்றுள்ளன. எனவே இந்த விவகாரத்தில் பயனர் கட்டணங்களை விதிக்கக்கூடிய வகையிலான முழு அதிகாரமும் மாநில அரசுகளிடம் உள்ளன’ என்று கூறப்பட்டிருந்தது.