ANI
இந்தியா

எம்.பி.க்களுக்கான சம்பளம், படிகள், ஓய்வூதியங்கள் உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு!

பணவீக்கம் மற்றும் உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவுகளைக் கருத்தில்கொண்டு கடைசியாக கடந்த 2018-ல் எம்.பி.க்களின் மாத சம்பளம் உயர்த்தப்பட்டது.

ராம் அப்பண்ணசாமி

முன் தேதியிட்டு மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான சம்பளம், படிகள், ஓய்வூதியங்கள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

ஏப்ரல் 1, 2023 முதல் மக்களவை மற்றும் மாநிலங்களை எம்.பி.க்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியங்களை உயர்த்துவதாக இன்று (மார்ச் 24) அறிவிக்கை வெளியிட்டுள்ளது மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம்.

பணவீக்கம் மற்றும் உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவுகளைக் கருத்தில்கொண்டு கடைசியாக கடந்த 2018-ல் எம்.பி.க்களின் மாத சம்பளம் ரூ. 70 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டது. தற்போது இது ரூ. 1.24 லட்சமாக உயர்ந்துள்ளது. அத்துடன் நாடாளுமன்றம் நடைபெறும்போது எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்டு வந்த தினப்படி ரூ. 2,000-ல் இருந்து ரூ. 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஓய்வூதியம், ரூ. 25 ஆயிரத்தில் இருந்து ரூ. 31 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. வரும் 2025-26 நிதியாண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் வேளையில் இந்த அறிவிக்கை வெளியாகியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

சம்பளம், தினப்படி போன்றவற்றுடன் வருடாந்திர தொலைபேசி, இணைய சலுகைகளும் எம்.பி.க்களுக்கு வழங்கப்படுகின்றன. அத்துடன், வருடத்திற்கு 34 முறை உள்நாட்டில் விமான பயணம் மேற்கொள்ளவும், எந்த நேரத்திலும் ரயில்களில் முதல் வகுப்புப் பயணம் மேற்கொள்ளவும் எம்.பி.க்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும், பதவிக்காலத்தின்போது தில்லியில் தங்கிக்கொள்ள இலவசமாக வீடுகளும் ஒதுக்கப்படுகின்றன.