மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ANI
இந்தியா

பாரத் விவகாரம்: கேரள அரசின் கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு

ஜெ. ராம்கி

மத்திய அரசு பரிந்துரைக்கும் என்சிஇஆர்டி (NCERT) பாடப்புத்தகங்களில் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்னும் பெயர் இடம்பெற வேண்டும் என்ற தேசியக் கல்விக்குழு பரிந்துரை செய்திருந்தது. இதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்கிற கேரள அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் இந்தியா, பாரத் என்னும் இரு பெயர்களையும் அங்கீகரிக்கிறது. எனவே, மத்திய அரசின் பாடப்புத்தகங்களில் இந்தியா என்றும் பாரத் என்றும் குறிப்பிடலாம் என்கிற நிலைப்பாடு இருந்தது. ஆனால், சமூக அறிவியல் பாடங்களில் இந்தியாவை 'பாரத்' என்று மத்தியக் கல்விக் குழு பரிந்துரை செய்திருந்தது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேரள அரசு கடிதம் எழுதியிருந்தது.

கேரள மாநில கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டியின் கடிதத்திற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்திருக்கிறார். ‘இந்தியா’ மற்றும் ‘பாரத்’ ஆகிய இரண்டும் ஒன்றுக்குப் பதில் இன்னொன்றாகப் பயன்படுத்தக்கூடியவை. இரண்டும் நாட்டின் அதிகாரப்பூர்வப் பெயர்களாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவதற்கான என்சிஇஆர்டி-யால் நியமிக்கப்பட்ட சமூகவியல் குழுவின் பரிந்துரையை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று இரு மாதங்களுக்கு முன்னர் கேரள அரசு கோரியிருந்தது. மாணவர்கள் மத்தியில் இது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இதற்கிடையே கேரள மாநில அரசு, மாநிலப் பாடத் திட்டக் குழு அமைக்கப்படும் என்றும், தற்போது பயன்பாட்டில் உள்ள 44 பாடப் புத்தகங்களை நீக்கிவிட்டு, புதிதாகப் பாடப் புத்தகங்கள் கொண்டுவரப்படும் என்றும் முடிவெடுத்துள்ளது. கேரள அரசின் கோரிக்கையை மத்திய அரசு மறுத்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட நகர்வு, கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று கேரளப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது