பள்ளி மாணவர்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வலியுறுத்தும் வகையில், சிபிஎஸ்இ கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் `எண்ணெய் பலகைகளை’ அமைக்குமாறு சிபிஎஸ்இ இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
2021-ல் 18 கோடியாக இருக்கும் உடல் பருமனான இந்திய மக்களின் எண்ணிக்கை, 2050-ல் 44.9 கோடியாக உயர வாய்ப்புள்ளது என்று நடப்பாண்டில் வெளியான லான்செட் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது, மேலும், 2019-21 தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி நகர்புற பகுதிகளில் வசிக்கும் ஐந்து நபர்களில் ஒருவருக்கு உடல் பருமன் பிரச்னை உள்ளதாக கூறப்பட்டுள்ளது, என்று சிபிஎஸ்இ இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பட்டுள்ளது.
மேலும், உடல் நலனிற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள் குறித்து பொது இடங்களில் எண்ணெய் பலகைகளை அமைத்தல், ஆரோக்கியமான உணவு முறைகளை மாணவர்களிடம் ஊக்குவித்தல், உடற்பயிற்சி-நடைபயிற்சி போன்றவற்றில் மாணவர்களை ஈடுபடுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ளுமாறு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் உயர்ந்து வரும் உடல் பருமன் பிரச்னை குறித்து கடந்த மார்ச் மாதத்தின்போது பேசிய பிரதமர் மோடி, சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10% அளவிற்கு குறைக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார்.
வரும் 2050-ல் 44 கோடி இந்திய மக்கள் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வெளியான ஒரு ஆய்வு கட்டுரையை தன் உரையில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, வாழ்க்கை முறை நோய்கள், குறிப்பாக உடல் பருமன் நாட்டில் ஒரு முக்கியமான சுகாதார பிரச்னையாக உருவெடுத்து வருவதாகக் கூறினார்.