இட்லி, தோசை மாவுக்கான ஜிஎஸ்டி 5% ஆகவே தொடரும் என மத்திய அரசின் மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் தெரிவித்துள்ளது.
தில்லியில் நடைபெற்ற 56-வது ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் வரி விதிப்புகளில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி விகிதங்கள் இரண்டு அடுக்குகளாகக் குறைக்கப்பட்டுள்ளன. அதன் முக்கிய அறிவிப்பாக சப்பாத்தி, ரொட்டி, அப்பம், பராத்தா என அழைக்கப்படும் அனைத்து விதமான இந்திய ரொட்டி வகை உணவுகளுக்கும் வரி விலக்கு அளித்து அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜிஎஸ்டி குழுவின் இந்த அறிவிப்பு வட இந்தியர்களுக்கு மட்டுமே சார்பாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, சப்பாத்தி, ரொட்டி வகை உணவுகளுக்கு மட்டும் வரி விலக்கு, இட்லி, தோசை செய்யும் மாவுகளுக்கு மட்டும் 18% ஜிஎஸ்டியா என ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசின் மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் பதிலளித்துள்ளது.
சமூக வலைத்தளத்தில் பதிலளித்துள்ள CBIC தெரிவித்திருப்பதாவது - ”இட்லி, தோசை மாவு ஏற்கனவே 5% ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் உள்ளது. இது மத்திய வரி (விகிதம்) அறிவிப்பு 1/2017-இன் பட்டியல் I-இல் உள்ள 100A என்ற வரிசை எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ரொட்டி வகைகள் அனைத்திற்கும் - அதாவது சப்பாத்தி, ரொட்டி, பரோட்டா, அப்பம், அக்கி ரொட்டி, பராத்தா போன்ற அனைத்துப் பெயர்களில் அழைக்கப்படும் ரொட்டி வகைகளுக்கும் வரி முற்றிலும் விலக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
Idly | Dosa | Idly Batter | GST | Roti