இந்தியா

நீட் தேர்வு முறைகேடுகள்: விசாரணையைத் தொடங்கிய சிபிஐ!

ராம் அப்பண்ணசாமி

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, விசாரணையைத் துவக்கியுள்ளது சிபிஐ.

ஏற்கனவே 2018, 2021 மற்றும் 2022 ஆகிய வருடங்களில் நடந்த நீட் நுழைவுத்தேர்வு முறைகேடுகள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியிருக்கிறது சிபிஐ. இந்த வருடம் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பிஹார் மற்றும் குஜராத் மாநிலங்களில் அந்தந்த மாநிலக் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வரும் வேளையில், நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்த சிபிஐ விசாரணையைத் தொடங்கியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கடந்த மே 5-ல் நடந்த மருத்துவ இளநிலை பட்டப்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் ஜூன் 4-ல் வெளியானது. இந்த முடிவுகளில் 67 தேர்வர்கள் முதலிடம் பிடித்தனர். இந்த 67 தேர்வர்களில் 6 தேர்வர்கள் ஹரியானா மாநிலத்தின் ஒரே மையத்தில் தேர்வெழுதிய தகவல் வெளியாகி சர்ச்சை கிளம்பியது.

இதனைத் தொடர்ந்து, `சில தேர்வு மையங்களில் தேர்வெழுதும் நேரம் குறைவாக வழங்கப்பட்டதால் சுமார் 1563 மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாக’ இந்தத் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. தேர்வாணையத்தின் விளக்கத்தை முன்வைத்து நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்ததால் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது தேசிய தேர்வு முகமை.

இந்த நீட் நுழைவுத் தேர்வுவில் நடந்த முறைகேடுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையில், `நீட் தேர்வை நடத்துவதில் ஏதேனும் ஒரு தரப்பிலிருந்து 0.001% அலட்சியம் இருந்தாலும்கூட, அதை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். தேர்வை நடத்தும் அமைப்பாக நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். தவறு இருந்தாலும், ஆம் தவறு நடந்தது என அதை ஒப்புக்கொள்ள வேண்டும்’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 8-க்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.