ANI
இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிஐ

மனுதாரரைக் கைது செய்ததை நியாயப்படுத்தும் வகையில் போதிய ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவரை விசாரிக்கவும், கைது செய்யவும் சிபிஐ-க்கு அதிகாரம் உள்ளது

ராம் அப்பண்ணசாமி

இன்று காலை (ஜூலை 29) மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக தில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது சிபிஐ.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் கெஜ்ரிவால். இந்த வழக்கு மீதான விசாரணை முடிந்து, தீர்ப்பு வெளியிடும் தேதியைக் குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்துள்ளது உயர் நீதிமன்றம். மேலும் சிபிஐ கைது செய்த வழக்கில் இடைக்கால ஜாமீன் கேட்டு கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவின் மீதான தீர்ப்பு இன்னும் உயர் நீதிமன்றத்தால் வழங்கப்படவில்லை.

சிபிஐ மேற்கொண்ட கைது நடவடிக்கையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், `மனுதாரர் கெஜ்ரிவால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் (ஆம் ஆத்மி கட்சி) தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், தில்லி யூனியன் பிரதேசத்தின் முதல்வராகவும் பதவி வகிக்கிறார். பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்டு அதனால் அவர் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். எனவே இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, `மனுதாரரைக் கைது செய்ததை நியாயப்படுத்தும் வகையில் போதிய ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவரை விசாரிக்கவும், கைது செய்யவும் சட்டப்படி சிபிஐ அமைப்புக்கு அதிகாரம் உள்ளது’ என்று வாதாடினார் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் டி.பி. சிங்.

கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ` பாகிஸ்தானில் இம்ரான் கான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். உடனே வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டார். நம் நாட்டில் அது போல நடக்கக்கூடாது. சிபிஐ கெஜ்ரிவாலைக் கைது செய்தது அவசியமற்றது. இதே மதுபான கொள்கை குற்றச்சாட்டு தொடர்பாக கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் காலவரையற்ற ஜாமீன் வழங்கியுள்ளது’ என்றார்.