இந்தியா

நீட் தேர்வு குளறுபடிகள்: பிஹாரில் இருவர் கைது

கிழக்கு நியூஸ்

நீட் தேர்வு முறைகேடு தொடர்புடைய வழக்கில் பிஹார் மாநிலம் பாட்னாவில் சிபிஐயால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ கடந்த திங்கள்கிழமை விசாரணையைத் தொடங்கியது. இந்த வழக்கில் முதல் கைது நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.

சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "மணீஷ் பிரகாஷ் மற்றும் அஷுதோஷ் என்று அடையாளம் காணப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டுள்ள இருவரும் பாட்னாவைச் சேர்ந்தவர்கள். அஷுதோஷ் என்பவர் மாணவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுப்பவர். மணீஷ் என்பவர் தேர்வு எழுதுபவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வார். நீட் தேர்வு வினாத் தாள் கசிவு தொடர்பாக முதல் கைது நடவடிக்கை இது. குற்றம்சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்கள்" என்றார் அவர்.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தியது. இந்தத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, நாடு முழுக்கப் போராட்டங்கள் வெடித்தன. நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்புடைய பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில்,"அண்மையில் வெளியான வினாத்தாள் கசிவுகள் தொடர்பாக நேர்மையான விசாரணை மேற்கொள்ளவும், கடுமையான தண்டனையை வழங்கவும் அரசு உறுதிகொண்டுள்ளது" என்றார்.