பெங்களூருவில் இன்று, நாளை, நாளை மறுநாள் (செப். 15, 16 மற்றும் 17) ஆகிய நாள்களில் காவிரி நீர் விநியோகம் தடைபடும் என்று நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் வாரியம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் நகருக்கு காவிரி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் குழாய் வழியாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காவிரி பம்பிங் நிலையங்கள் மற்றும் முக்கிய குழாய்களின் சீரான செயல்பாடு மற்றும் நீண்டகால செயல்திறனை உறுதி செய்வதற்காக இன்றிலிருந்து 3 நாட்களுக்கு காவிரி நீர் விநியோகம் தடை படும் என அம்மாநில நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியபோது, “காவிரி நீர் வழங்கல் குழாய்களில் மேற்கொள்ளப்படும் அவசரகால பராமரிப்பால், பெங்களூருவுக்கு தடையில்லாத குடிநீர் வழங்க முடியும். காவிரி 5-ம் கட்ட பம்பின் நிலையங்கள், செப்டம்பர் 15 அதிகாலை 1 மணி முதல் செப்டம்பர் 17 பிற்பகல் 1 மணி வரை 60 மணி நேரத்திற்கு மூடப்படும். 1,2, 3 மற்றும் 4-ம் கட்டங்கள், செப்டம்பர் 16 காலை 6 மணி முதல் செப்டம்பர் 17 காலை 6 மணி வரை 24 மணி நேரத்திற்கு மூடப்படும். இதனால், முன்னெச்சரிக்கையாக, பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் வாரியம் பொதுமக்களை முன்கூட்டியே போதுமான அளவு தண்ணீரை சேமித்து வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.
அண்மைக் காலமாகவே பெங்களூருவில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 3% அதிகமாக தண்ணீர் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அண்மையில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருவர் மட்டுமே வசித்து வரும் வீட்டுக்கு ஒரு மாதத்திற்கு ரூ. 15,800 தண்ணீர் கட்டணம் கட்ட வேண்டும் என பில் வந்தது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
Bengaluru | Drinking water | Water supply | Cauvery water supply | Greater Bengaluru |