இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் சேனாபதி க்ரிஸ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 18 பேர் மீது எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போவி என்கிற பழங்குடியினத்தைச் சேர்ந்த துர்கப்பா என்ற நபர் முன்பு ஐஐஎஸ்சி பெங்களூருவின், நிலையான தொழில்நுட்ப மையத்தில், ஆசிரியராகப் பணியாற்றினார். இதனை அடுத்து கடந்த 2014-ல் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
தன் பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கடந்த 2014-ல் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், மேலும் அப்போது சாதி ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் அண்மையில் பெங்களூருவில் உள்ள 71-வது மாநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் துர்கப்பா.
துர்கப்பா தொடர்ந்த வழக்கில், அன்றைய ஐஐஎஸ்சி இயக்குநர் பலராம், ஐஐஎஸ்சி நிர்வாகக் குழு உறுப்பினர் சேனாபதி க்ரிஸ் கோபாலகிருஷ்ணன், கோவிந்தன் ரங்கராஜன், ஸ்ரீதர் வாரியர், தாசப்பா, மனோஹரன் உள்ளிட்ட 16 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து துர்கப்பா குற்றம் சுமத்திய 18 பேர் மீதும் எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது 71-வது மாநகர குற்றவியல் நீதிமன்றம். இந்த உத்தரவின் அடிப்படையில், பெங்களூருவின் சதாஷிவ் நகர் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக, இதுவரை ஐஐஎஸ்சி பெங்களூரு நிர்வாகம் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினராக உள்ள க்ரிஸ் கோபாலகிருஷ்ணன் தரப்பில் எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.