தில்லி செங்கோட்டை அருகே தீப்பிடித்த வாகனங்கள் 
இந்தியா

தில்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு: 8 பேர் உயிரிழப்பு | Delhi Car Blast |

கார் வெடிப்பு சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி....

கிழக்கு நியூஸ்

தில்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தில்லி செங்கோட்டை அருகேயுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே நவம்பர் 10 அன்று மாலை கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. பின்னர் கார் வெடித்துச் சிதறியதால் அருகருகே இருந்த வாகனங்கள் தீப்பிடித்தன.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் சில வாகனங்கள் எரிந்த நிலையில் இதுவரை 8 பேர் உயிரிழந்தனர். 24-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீப்பிடித்து வெடித்த கார் யாருடையது என்பது குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தில்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து காவல் ஆணையரிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார். அதன்பின் அமித் ஷாவிடம் பிரதமர் மோடி விவரங்களைக் கேட்டறிந்தார். இதையடுத்து தில்லி விமான நிலையம், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளனர்.

கார் வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின் தில்லி காவல்துறையினருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

An explosion was reported in a car near the Red Fort Metro Station in the national capital on Monday.