கரூர் கூட்டநெரிசல் தொடர்புடைய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வால் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 அன்று மேற்கொண்ட மக்களைச் சந்திக்கும் பிரசாரத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தார்கள். இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் கடந்த அக்டோபர் 3 அன்று சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான விசாரணைக் குழு கரூரில் விசாரணை நடத்தி வருகிறது.
சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்ததற்கு எதிராக தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேலும், அக்டோபர் 3 அன்று கரூர் சம்பவம் தொடர்பாக விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுப்பு தெரிவித்தது. மேலும், கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக தலைவர் உமா ஆனந்தன் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜேகே மகேஷ்வரி மற்றும் என்வி அஞ்சாரியா ஆகியோர் அடங்கி அமர்வு கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்புடைய பல்வேறு மனுக்களையும் விசாரித்தது.
அரசியல் கட்சிகளுக்கு நிலையான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டபோது, சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க நீதிமன்றம் எப்படி உத்தரவிட்டது என்று உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. மேலும், மதுரை அமர்வின் வரம்புக்குள் வரும் கரூர் குறித்து முதன்மை அமர்வால் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பயது.
உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சுயாதீன விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், காவல் துறையினரின் அறிவுறுத்தலின் பெயரிலேயே விஜய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் என்றும் தவெக சார்பில் வாதிடப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற நீதிபதி மகேஷ்வரி, "நள்ளிரவில் நான்கு மணி நேர்த்தில் உடற்கூராய்வைச் செய்து முடித்தீர்களா?" என்று மூத்த வழக்கறிஞர் பி வில்சனை நோக்கி கேள்வியெழுப்பினார். "மக்கள் உடல்களைக் கேட்டதால், இரவில் உடற்கூராய்வு நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கினார். அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டார்கள்" என்று பி. வில்சன் பதிலளித்தார். மேலும், உச்ச நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளிப்பதாக பி. வில்சன் ஒப்புக்கொண்டார்.
இறுதியாக, இரு தரப்புகளையும் கேட்டறிந்த பிறகு, "என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும் எனப் பார்க்கிறோம்" என்று உச்ச நீதிமன்ற நீதிபதி மகேஷ்வரி தெரிவித்தார்.
TVK Vijay | Karur Stampede | Karur | SIT | Madras High Court | Madurai Bench | Supreme Court |