எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கச் செய்யவேண்டும் என்ற கொள்கையை காங்கிரஸுடம் இருந்து எதிர்பார்ப்பது மிகப்பெரிய தவறு என்று மாநிலங்களவையில் பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
கடந்த ஜன.31-ல் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இந்நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின் முடிவில் இன்று (பிப்.6) பதிலுரை வழங்கியபோது, காங்கிரஸ் கட்சியைத் தாக்கிப் பிரதமர் மோடி கூறியதாவது,
`குடியரசுத் தலைவரின் உரை ஊக்கமளிப்பதாகவும், பயனுள்ளதாகவும், நம் அனைவருக்கும் வழிகாட்டுவதாகவும் இருந்தது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பது குறித்து நிறைய விஷயங்களைக் கூறலாம். ஆனால் இதில் என்ன பிரச்னை இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.
எல்லோருக்கும் எல்லாவற்றையும் கிடைக்கச் செய்யவேண்டும் என்ற கொள்கையை காங்கிரஸுடம் இருந்து எதிர்பார்ப்பது மிகப்பெரிய தவறு. இது அவர்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்ட விஷயம் என்பது மட்டுமல்லாமல், அவர்களின் கொள்கைக்கு முரணானதும்கூட ஏனென்றால் ஒட்டுமொத்த கட்சியும் ஒரே ஒரு குடும்பத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
பொய்கள், ஊழல், குடும்பம், சமரசம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவமே காங்கிரஸ் மாடல். காங்கிரஸ் மாடலைப் பொறுத்தவரை குடும்பத்தின் முக்கியத்துவமே அவர்களுக்கு முதன்மையானது. அவர்களின் ஆற்றல் இதற்காகவே செலவிடப்படுகிறது’ என்றார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் மொத்தம் 70 எம்.பி.க்கள் பங்கேற்றார்கள். நேற்றைக்கு முந்தைய தினம், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மக்களவை தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பதிலளித்தார் பிரதமர் மோடி.