கோப்புப்படம் 
இந்தியா

ஹரியாணா தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது: காங்கிரஸ்

"நாங்கள் என்ன செய்தோம், என்ன செய்யவில்லை, எங்கு தவறு நடந்தது என்பது தொடர்பாக நிச்சயமாக பகுப்பாய்வு செய்யப்படும்."

கிழக்கு நியூஸ்

ஹரியாணா தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் தொடக்கத்தில் முன்னிலை வகித்த காங்கிரஸ், அடுத்தடுத்த சுற்றுகளில் சரிவைச் சந்திக்கத் தொடங்கியது. ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மை இடங்களைக் காட்டிலும் கூடுதலான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. மாலை 5.50 மணியளவில் பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 14 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் 8 இடங்களில் பாஜகவும் 6 இடங்களிலும் காங்கிரஸும் முன்னிலையில் உள்ளன.

இதனிடையே காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், பவன் கெரா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.

ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

"ஹரியாணா தேர்தல் முடிவுகள் முற்றிலும் எதிர்பார்க்காதது. ஆச்சர்யமளிக்கிறது. கள நிலவரத்துக்கு எதிராக தேர்தல் முடிவு அமைந்துள்ளது. மாற்றம் வேண்டும் என்ற மக்கள் சிந்தனைக்கு எதிராக முடிவுகள் வந்துள்ளன. இத்தகைய சூழலில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

குறைந்தபட்சம் மூன்று மாவட்டங்களில் வாக்கு இயந்திரங்களின் செயல்பாடு, வாக்கு எண்ணும் முறை மீது மிகத் தீவிர புகார்கள் வந்துள்ளன. மேலும் நிறைய புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஹரியாணாவில் எங்களுடைய மூத்த தலைவர்களுடன் பேசினோம். அவர்களிடமிருந்து இந்தத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. நாளை அல்லது நாளை மறுநாள் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கவுள்ளோம். அவகாசம் கோரவுள்ளோம். எங்களுடைய வேட்பாளர்கள் முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். இவற்றை தேர்தல் ஆணையத்தின் பார்வைக்குக் கொண்டு செல்வோம்.

ஹரியாணாவில் இன்று நாம் கண்டிருப்பது சூழ்ச்சியின் வெற்றி. மக்களின் விருப்பத்தை சீர்குலைத்ததற்கான வெற்றி. வெளிப்படைத்தன்மையுடனான ஜனநாயக முறைக்குக் கிடைத்த தோல்வி.

ஹரியாணாவின் கதை இன்னும் முடியவில்லை, தொடரும். ஜம்மு-காஷ்மீரைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சி அமையும்.

நான் கூறியதைப்போல காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கக் கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஜம்மு - காஷ்மீர் மக்கள், கூட்டணி ஆட்சிக்கான மிகத் தெளிவான முடிவை எங்களுக்கு அளித்துள்ளார்கள்.

ஹரியாணா தொடர்பாக தேவையான அனைத்து ஆய்வுகளையும் நிச்சயமாக மேற்கொள்வோம். முதலில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் புகார்களை தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்வோம். நாங்கள் என்ன செய்தோம், என்ன செய்யவில்லை, எங்கு தவறு நடந்தது என்பது தொடர்பாக நிச்சயமாக பகுப்பாய்வு செய்யப்படும்.

இதுதொடர்பாக குழு அமைக்கப்படும். காங்கிரஸ் கட்சியில் இது வழக்கமான நடைமுறைதான். அனைவரிடமும் பேசிய பிறகு பகுப்பாய்வு செய்யப்படும். ஆனால், தற்போது பகுப்பாய்வு செய்வதற்கான நேரமல்ல.

எங்களிடமிருந்து வெற்றி பறிக்கப்பட்டுள்ளது என்பதுதான் தற்போதைய நிலையில் மிக முக்கியமானது. அமைப்பு முறை தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் உணர்வுகள் மற்றும் கள நிலவரம் அனைத்தும் மாற்றத்துக்காக இருந்ததாகவே அனைவரும் உணர்ந்திருந்தார்கள். இன்றைய முடிவுகள் அதை வெளிப்படுத்தவில்லை. நிச்சயமாக பகுப்பாய்வு இருக்கும்.

ஜம்முவில் நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இதற்கும் சில காரணங்கள் உள்ளன. இதுகுறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

ஆனால், மஹாராஷ்டிரத்தில் மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ்தான் முதலிடத்தில் இருந்தது. ஜம்மு-காஷ்மீரில் விரைவில் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும். பொதுவான செயல்திட்டம் வகுக்கப்படும். மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்" என்றார் ஜெய்ராம் ரமேஷ்.