இந்தியா

ஹேமந்த் சோரனின் ஜாமீனை ரத்து செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம்

உயர் நீதிமன்றம் முறையாக விசாரித்துத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில் நாங்கள் கூடுதலாக கவனிக்க எதுவும் இல்லை

ராம் அப்பண்ணசாமி

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய முடியாது என்று அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

கடந்த ஜனவரியில் நில மோசடி, பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ராஞ்சியின் பிர்ஸா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார் ஹேமந்த் சோரன். இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்றம் ஹேமந்த் சோரனுக்கு கடந்த ஜூன் 28-ல் ஜாமீன் வழங்கியது.

இந்த ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.வி. ராஜூ ஆஜராகி, ஹேமந்த் சோரனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோரைக் கொண்ட அமர்வு, `உயர் நீதிமன்றம் முறையாக விசாரித்துத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில் நாங்கள் கூடுதலாக கவனிக்க எதுவும் இல்லை. கூடுதலாக கவனித்தால் உங்களுக்குத்தான் சிக்கல் ஏற்படும். எனவே இதில் நாங்கள் தலையிட முடியாது’ என்று கூறி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்தனர்.

கடந்த ஜனவரியில் நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்த பிறகு தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஹேமந்த் சோரன். இதைத் தொடர்ந்து சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த வழக்கில் ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்றம் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் அளித்ததைத் தொடர்ந்து ஜூலை 4-ல் மூன்றாவது முறையாக ஜார்க்கண்ட் மாநில முதல்வராகப் பொறுப்பேற்றார் ஹேமந்த் சோரன். இதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 45 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றார் ஹேமந்த் சோரன்.