இந்தியா

பிரஜ்வல் ரேவண்ணாவின் கடவுச்சீட்டை முடக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்

கிழக்கு நியூஸ்

ஆபாசக் காணொலி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் கடவுச்சீட்டை முடக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவெகௌடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. தொடர்புடைய ஏராளமான ஆபாசக் காணொலிகள் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பிலிருந்து இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தக் காணொலி விவகாரம் குறித்து விசாரிக்க கர்நாடக காங்கிரஸ் அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

இதனிடையே, பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் முன்பு பணிபுரிந்த பெண் பணியாளர் அளித்த புகாரின் பெயரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது கர்நாடக காவல் துறையினர் பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இந்த வழக்கில் தேவெகௌடாவின் மகன் ஹெச்டி ரேவண்ணா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் முதல் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியில் உள்ளன. எனவே, இது பாஜகவையும் பாதித்துள்ளது. இதனிடையே, பிரஜ்வல் ஜெர்மனிக்குச் சென்றதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. மதச்சார்பற்ற ஜனதா தளம் இவரைக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது.

இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் கடவுச் சீட்டை முடக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

"ஆபாசக் காணொலிகள் வழக்கு தொடர்பாக எங்களுடைய அரசு கடந்த மாதம் 28-ல் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் புகார் அளித்ததன் பெயரில் ஏப்ரல் 28-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும், பிரஜ்வல் ரேவண்ணா ஏப்ரல் 27 அன்றே நாட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். இவர் தனது தூதரகக் கடவுச்சீட்டு மூலம் வெளிநாட்டுக்குப் பயணித்திருப்பதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டதாக பிரஜ்வல் ரேவண்ணா மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்பதால் அவர் நாடு திரும்புவது மிக முக்கியம்.

எனவே, இந்த விவகாரம் குறித்து வெளியுறவுத் துறை மற்றும் உள்துறை அமைச்சகங்களிடம் முறையிட்டு பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வழங்கப்பட்ட கடவுச்சீட்டை ரத்து செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக தேவையான அனைத்து தகவல்கள் மற்றும் சட்ட நடைமுறைகளை கர்நாடக சிறப்பு விசாரணைக் குழு அளிக்கும்" என்று தனது கடிதத்தில் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.