இந்தியா

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது

கிழக்கு நியூஸ்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியுள்ளது.

புதிய நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றும் முதல் உரை இது.

நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார். குடியரசுத் தலைவர் உரை நிறைவடைந்து அரை மணி நேரத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அவை நடவடிக்கைகள் தொடங்கும்.

இது 17-வது மக்களவையின் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடர். ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்தக் கூட்டத்தொடரானது பிப்ரவரி 9-ம் தேதி வரை வெறும் 8 நாள்களுக்கு மட்டும் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளார்கள்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, "புதிய அரசு அமைந்தவுடன் முழு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் மரபை நாங்கள் பின்பற்றவுள்ளவோம்" என்றார்.

பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவிருக்கிறார். புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் முதல் நிதிநிலை அறிக்கை இது.

முன்னதாக, மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.