ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்ட உள்கட்டமைப்புக்கான கட்டணத்தை வசூலிக்க பிஎஸ்என்எல் தவறியதால், அரசுக்கு ரூ.1,757.56 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிஏஜி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"மே 2014 முதல் மார்ச் 2024 வரை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் (ஆஜேஐஎல்) உடன் உள்ளகட்டமைப்பைப் பகிர்வுக்கான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை அமல்படுத்தவில்லை. மேலும், உள்கட்டமைப்புப் பகிர்வில் கூடுதல் தொழில்நுட்பத்தை ஜியோ பயன்படுத்தியதற்குக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதனால், அரசுக்கு ரூ. 1,757.76 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரு நிறுவனங்களின் வருவாய் பகிர்விலிருந்து உரிமக் கட்டணத்தைக் கழிக்கத் தவறியதால் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ. 38.36 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சிஏஜியின் அறிக்கை தெரிவித்துள்ளது. அதாவது டெலிகாம் உள்கட்டமைப்பு வழங்குநர்களுக்கு பிஎஸ்என்எல் மற்றும் ஜியோ உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும். ஜியோவின் உரிமக் கட்டணத்தைக் கழிக்க பிஎஸ்என்எல் தவறியுள்ளது.
உள்கட்டமைப்பைப் பகிர்வதற்கானக் கட்டணத்தைக் குறைத்து கணக்கிட்டதால் ஜிஎஸ்டி உள்பட ரூ 29 கோடி கூடுதல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் சிஏஜியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.