பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனம் 18 ஆயிரம் முதல் 19 ஆயிரம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நிதி நிலையை மேம்படுத்துவதற்காக 35% ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 38% ஊழியர்களின் ஊதியத்துக்காகச் செலவாகிறது. 35% பணியாளர்கள் அதாவது 18 ஆயிரம் முதல் 19 ஆயிரம் வரையிலான ஊழியர்களைப் பணியிலிருந்து விடுவிப்பதன் மூலம், நிறுவனத்தின் ஊதியத்துக்கான ஆண்டு செலவு ரூ. 7,500 கோடியிலிருந்து ரூ. 5 ஆயிரம் கோடியாகக் குறையும். இந்த விருப்ப ஓய்வு முன்னெடுப்பை மேற்கொள்வதற்காக மத்திய அரசிடம் ரூ. 15 ஆயிரம் கோடியை விடுவிக்க வேண்டும் என பிஎஸ்என்எல் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு நிதியமைச்சகத்திடமிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன், தகவல் தொடர்பு அமைச்சகம் சார்பில் அமைச்சரவையிலும் ஒப்புதல் கோரப்படவுள்ளது. இதுதொடர்பாக, இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பது பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குப் புதிதல்ல. 2019-ல் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனத்தை மீட்டெடுப்பதற்கான தொகையாக ரூ. 69 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவித்தது. அப்போது 93 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வின் அடிப்படையில் ஓய்வு பெறும் திட்டத்தைத் தேர்வு செய்தார்கள்.