இந்தியா

சிஐடி விசாரணைக்கு ஆஜரானார் எடியூரப்பா!

கிழக்கு நியூஸ்

போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, சிஐடி விசாரணைக்கு இன்று ஆஜரானார்.

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பி.எஸ். எடியூரப்பா மீது கடந்த மார்ச் மாதம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை கர்நாடக மாநில குற்றவியல் விசாரணை துறை (சிஐடி) விசாரிக்கிறது. விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சிஐடி கடந்த 12 அன்று எடியூரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஜூன் 13-ல் பெங்களூரு நீதிமன்றம் எடியூரப்பாவுக்கு எதிராக பிணையில் வெளியில் வர முடியாதபடி பிடிவாரண்ட் பிறப்பித்தது. இருந்தபோதிலும், கர்நாடக உயர் நீதிமன்றம் எடியூரப்பாவைக் கைது செய்யத் தடை விதித்தது.

போக்சோ வழக்கு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள எடியூரப்பா, சதித் திட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு மக்கள் தக்க பாடத்தைப் புகட்டுவார்கள் என்றார்.

தில்லி சென்றிருந்ததால் சிஐடி விசாரணை முன்பு ஆஜராக முடியவில்லை என்று கூறியிருந்த எடியூரப்பா, 17 அன்று ஆஜராவேன் என்றார். இதன்படி, இன்று சிஐடி விசாரணை முன்பு எடியூரப்பா ஆஜராகியுள்ளார்.

இதனிடையே, எடியூரப்பா மீது புகாரளித்த பெண் கடந்த மாதம் நுரையீரல் புற்றுநோயால் காலமானார்.