புனேவில் இந்திராயணி நதியின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம் ஒன்று உடைந்து விபத்துக்குள்ளானதில் சுற்றுலாப் பயணிகள் பலர் ஆற்றில் விழுந்துள்ளார்கள்.
புனே அருகே கந்த்மாலா எனும் இடத்தில் இந்திராயணி நதியின் குறுக்கே பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது சற்று புகழ்பெற்ற சுற்றுலாத் தலம். குறிப்பாக மழைக்காலத்தில் மக்கள் அதிகளவில் கூடும் சுற்றுலாத் தலம்.
நதியின் குறுக்கே உள்ள இந்தப் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15 முதல் 20 சுற்றுலாப் பயணிகள் இருந்தார்கள். அப்போது பாலம் உடைந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிகிறது. இதில் பாலத்திலிருந்தவர்கள் கீழே விழுந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.
விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, காவல் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியைத் தொடங்கியிருக்கிறார்கள். இதில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளார்கள். இரு பெண்கள் பாலத்துக்கு அடியில் சிக்கியிருப்பதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
மீட்புப் பணி முழுவதுமாக நிறைவடைந்த பிறகு, முழுமையான விவரங்கள் தெரியவரும் எனத் தெரிகிறது. கடந்த இரு நாள்களாக இங்கு கன மழை பெய்துள்ளதாகத் தெரிகிறது.
மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், "பாலம் உடைந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. மண்டல ஆணையர், தாசில்தார் மற்றும் காவல் ஆணையரிடம் பேசியுள்ளேன். சிலர் காயமடைந்திருக்கிறார்கள். இவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். சிலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம். உயிரிழந்தவர்கள் தகவல் பற்றி இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கப் பெறவில்லை. எனவே, இதுபற்றி தற்போது பேசுவது சரியாக இருக்காது. முழுமையானத் தகவல் கிடைத்த பிறகு, உங்களிடம் தெரிவிக்கிறேன்" என்றார்.