புஷ்பா 2 சிறப்புக் காட்சி கூட்ட நெரிசலில் சிக்கிக் காயமடைந்த சிறுவனுக்கு நினைவு திரும்பியதாக செய்தி வெளியாகியுள்ளது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலரது நடிப்பில், சுகுமார் இயக்கிய ‘புஷ்பா 2’ படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் கடந்த 5-ல் வெளியானது. வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்துள்ளது புஷ்பா 2.
பட வெளியீட்டிற்கு முன்பு இதன் சிறப்புக் காட்சிக்கு ஆந்திர, தெலங்கானா மாநில அரசுகள் அனுமதி அளித்திருந்தன. இதன்படி கடந்த டிச. 4-ம் தேதி இரவில் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புஷ்பா 2 சிறப்புக் காட்சியைக் காணச் சென்றுள்ளார் அல்லு அர்ஜுன். அப்போது அங்கு வந்திருந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
மேலும், கூட்ட நெரிசலில் சிக்கிப் படுகாயம் அடைந்த ரேவதியின் 12 வயது மகன் ஸ்ரீ தேஜ் கோமா நிலையில் இருந்தபடி, கடந்த 20 நாட்களாக ஹைதராபாதில் இருந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், கோமா நிலையில் இருந்த தேஜுக்கு நினைவு திரும்பியதாக அவரது தந்தை பாஸ்கர் நேற்று தகவல் தெரிவித்துள்ளார்.
ரேவதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அல்லு அர்ஜுன், திரையரங்க உரிமையாளர் ஆகியோர் மீது வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, ஹைதராபாதின் சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் நேற்று (டிச.24) காலை தொடங்கி சுமார் மூன்றரை மணிநேரம் வரை அல்லு அர்ஜுனிடம் விசாரணை நடத்தப்பட்டது.