விஜய் மல்லையா இந்தியாவுக்கு வந்தால் அவர் தொடர்ந்த மனு மீது விசாரணை நடத்தப்படும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டார். இதுகுறித்து வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், கடந்த 2016-ல் இந்தியாவிலிருந்து தப்பிய அவர், லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார்.
தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி
வங்கிகளில் அவர் ரூ. 9,000 கோடி கடன் பெற்று மோசடி செய்த நிலையில், அவரது ரூ. 14,000 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், வங்கிகள் அவரிடமிருந்து ரூ. 6,000 கோடி கடனை மீட்டுள்ளன. இதற்கிடையில் கடந்த 2019-ல் அவர் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார்.
விஜய் மல்லையாவின் மனு
இதையடுத்து, அவ்வாறு அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகளுக்கான சட்டத்தையும் எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீசந்திரசேகர் மற்றும் நீதிபதி கவுதம் அகாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
விஜய் மல்லையா மனு விசாரணை
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மல்லையா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய் மனு அளித்தவர் நாட்டில் இல்லாவிட்டாலும் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட முந்தைய தீர்ப்புகளை நீதிபதிகள் முன் சமர்ப்பித்தார். அப்போது அரசு தரப்பில் வாதாடிய சாலிசிட்டர் ஜென்ரல் துஷார் மேத்தா, “மல்லையா இந்தியாவுக்கு வந்த பிறகு அவரது மனுவை விசாரணைக்கு எடுப்பது பற்றி நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். அவர் ஏற்கெனவே தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர்” என்று வாதாடினார்.
இந்தியாவுக்கு வர வேண்டும்
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “விஜய் மல்லையா இந்தியாவுக்கு வந்தால் தான் அவரது மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அவர் நேரில் ஆஜராகாமல் அவரது மனு ஏற்றுக்கொள்ளப்படாது. அவர் இந்தியாவுக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு அது வழங்கும் சலுகைகளை மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. விஜய் மல்லையாவின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்யவில்லை. மாறாக அவருக்கு நேரில் ஆஜராக மற்றொரு வாய்ப்பு வழங்கப்படுகிறது” என்று தெரிவித்து வழக்கின் விசாரணையை பிப்ரவரி 18-க்கு ஒத்தி வைத்தனர்.
Will not hear plea against fugitive tag if Vijay Mallya does not return to India, warns Bombay HC