ANI
இந்தியா

போயிங் 787 ரக விமானங்கள் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்படும்: அமைச்சர் ராம் மோகன் நாயுடு

கருப்புப் பெட்டியை ஆய்வுக்கு உட்படுத்துவது மூலம், விபத்தின்போது நடந்தவை குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்கக்கூடும் என்று நம்புகிறோம்.

ராம் அப்பண்ணசாமி

அஹமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்குப் பிறகு முதல்முறையாக செய்தியாளர்களை சந்திந்து விபத்து குறித்து விளக்கமளித்த மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, விபத்துக்குள்ளான போயிங் 787 ரகத்தைச் சேர்ந்த நாட்டிலுள்ள விமானங்கள் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியதாவது,

`இந்த சம்பவத்தை அமைச்சகம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. விமான விபத்து புலனாய்வுப் பிரிவுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் இயக்குநர் ஜெனரல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நிலைமையை ஆய்வு செய்தார்.

நேற்று மாலை 5 மணியளவில் விபத்து நடந்த இடத்திலிருந்து கருப்புப் பெட்டி மீட்கப்பட்டதாக தொழில்நுட்ப புலனாய்வுக் குழு தகவல் தெரிவித்தது. இந்த கருப்புப் பெட்டியை ஆய்வுக்கு உட்படுத்துவது மூலம், விபத்தின்போது அல்லது விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு நடந்தவை குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்கக்கூடும் என்று விமான விபத்து புலனாய்வுப் பிரிவு நம்புகிறது.

விமான விபத்து புலனாய்வு பிரிவு முழு விசாரணையை மேற்கொண்ட பிறகு, அதன் முடிவுகள் அல்லது அறிக்கை என்னவாக இருக்கும் என்பதை அறிய நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

மிகவும் கடுமையான பாதுகாப்பு தர நிலைகள் நாட்டில் (அமலில்) உள்ளன. சம்பவம் நடைபெற்றபோது, ​​போயிங் 787 ரக விமானங்களில் விரிவான முறையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் இருப்பதை நாங்கள் உணர்ந்தோம்.

787 ரக விமானங்களில் விரிவான ஆய்வை மேற்கொள்ள விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று நமது நாட்டில் 34 (787 ரக) விமானங்கள் உள்ளன. அதில் 8 ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்று நான் நம்புகிறேன். உடனடியாக அவை அனைத்தும் ஆய்வு செய்யப்பட உள்ளன’ என்றார்.