மஹாராஷ்டிர முதல்வராக 3-வது முறையாகப் பதவியேற்றுள்ளார் பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்னவீஸ்.
இன்று (டிச.5) மாலை 5.30 மணி அளவில் தெற்கு மும்பையில் அமைந்துள்ள ஆஸாத் மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில், மஹாராஷ்டிரத்தின் முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைத்தார் மஹாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்.
இதனைத் தொடர்ந்து சிவசேனா கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜித் பவாரும் துணை முதல்வர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். அமைச்சரவையில் இடம்பெறும் பிற அமைச்சர்கள் விரைவில் பதவியேற்பார்கள் என செய்தி வெளியாகியுள்ளது.
இந்த பதவியேற்பு நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, சச்சின் டெண்டுல்கர் எனப் பலரும் பங்கேற்றனர்.
இந்த பதவியேற்பு விழாவுக்கான பாதுகாப்பில் சுமார் 4,000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பதவியேற்பு விழாவை ஒட்டு ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் மும்பை மாநகரில் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.