இந்தியா

தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம்: அமித் ஷா

கிழக்கு நியூஸ்

தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பாஜக முடிவுக்குக் கொண்டு வரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:

"தெலங்கானாவில் காங்கிரஸ் மற்றும் தெலங்கானா ராஷ்டிர சமிதியால் கொண்டு வரப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவருவதாக பாஜக முடிவு செய்துள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு அந்த இடங்கள் வழங்கப்படும்.

தெலங்கானா ராஷ்டிர சமிதி செய்த ஊழல் வழக்குகளில் காங்கிரஸ் அரசு எதையும் விசாரிக்கவில்லை. தெலங்கானா ராஷ்டிர சமிதி மற்றும் காங்கிரஸ் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. ஊழலிலிருந்து தெலங்கானாவை விடுவிக்க மோடி செயல்படுவார்.

ஏஐஎம்ஐஎம் மீதுள்ள பயம் காரணமாக தெலங்கானா ராஷ்டிர சமிதியும், காங்கிரஸும் தெலங்கானா விடுதலை நாளைக் கொண்டாடுவதில்லை" என்றார் அவர்.

தெலங்கானாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4% இடஒதுக்கீட்டை காங்கிரஸ் அரசு பாதுகாக்கும் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

தெலங்கானாவில் உள்ள 17 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் மே 13-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி 9 தொகுதிகளையும், பாஜக 4 இடங்களையும், காங்கிரஸ் 3 இடங்களையும், ஏஐஎம்ஐஎம் ஒரு இடத்தையும் வென்றன.