இந்தியா

மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு

கிழக்கு நியூஸ்

18-வது மக்களவையின் தலைவராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

18-வது மக்களவையின் தலைவர் பதவிக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஓம் பிர்லா, இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

எதிர்க்கட்சிகள் மக்களவை துணைத் தலைவர் பதவியைப் போட்டியின்றி வழங்கக் கோரிய நிலையில், பாஜக இந்த நிபந்தணைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து, மக்களவைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளரை நிறுத்த இண்டியா கூட்டணி முடிவு செய்தது.

ஓம் பிர்லா மற்றும் கொடிக்குன்னில் சுரேஷ் சார்பில் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டன. ஓம் பிர்லாவுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்கள். கொடிக்குன்னில் சுரேஷ் ஆதரவாக 3 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. மக்களவைத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான நடைமுறை தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி ஓம் பிர்லாவை முன்மொழிந்து தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

சிவசேனை (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. அரவிந்த் சாவந்த் கொடிக்குன்னில் சுரேஷை முன்மொழிந்து தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

இதைத் தொடர்ந்து, இடைக்காலத் தலைவர் பர்த்ருஹரி மஹதாப் குரல் வாக்கெடுப்பு நடத்தினார். இதன்படி, மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவையின் தலைவராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் ஓம் பிர்லாவை அவருடைய இருக்கைக்கு அழைத்து வந்தார்கள். இதைத் தொடர்ந்து, ஓம் பிர்லா மக்களவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்தார்.