இந்தியா

நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே தள்ளுமுள்ளு: பாஜக எம்.பி.க்குக் காயம்!

பதவியில் இருந்தபோதே அம்பேத்கருக்கு எதிரான அவமரியாதையை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டது, இருமுறை திட்டமிட்டு தேர்தலில் அவரை தோற்கடித்தது.

ராம் அப்பண்ணசாமி

அம்பேத்கர் தொடர்பான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்தைக் கண்டித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், அம்பேத்கரை அவமதித்த காங்கிரஸைக் கண்டித்து பாஜக எம்.பி.க்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பாஜக எம்.பி. ஒருவருக்குக் காயம் ஏற்பட்டது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய கருத்து சர்ச்சையானது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமித் ஷாவின் இந்த கருத்துகளுக்கு கண்டனங்களை தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து தாம் பேசியவற்றை காங்கிரஸ் கட்சி திரித்து பரப்பியதாக நேற்று மாலை விளக்கமளித்தார் அமித் ஷா. இந்நிலையில், இன்று காலை நீல நிற உடைகளை அணிந்துவந்த காங்கிரஸ் எம்.பி.க்கள், அமித் ஷா பதவி விலகக்கோரி நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே நேரம், நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு வெளியே காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பாஜக கூட்டணி எம்.பி.க்கள். பதவியில் இருக்கும்போதே அம்பேத்கருக்கு எதிரான அவமரியாதையை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டதாகவும், திட்டமிட்டு தேர்தலில் இருமுறை அவரை காங்கிரஸ் கட்சி தோற்கடித்ததாகவும் பாஜக எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர்.

இதைத் தொடர்ந்து, இரு தரப்பு எம்.பி.க்களுக்கும் நாடாளுமன்ற நுழைவாயிலில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பாஜக எம்.பி. சந்திர பிரதாப் சாரங்கிக்குக் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து சிகிச்சைக்காக அவர் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டார்.

அதன்பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்குக் கூடியதும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பிற்பகல் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.