குஜராத்தில் புதிய அமைச்சரவையில் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி உள்பட 25 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.
குஜராத்தில் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இவரது ஆட்சியில் மொத்தம் 17 அமைச்சர்கள் உள்ளனர். இதற்கிடையில் 2027 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டு வர அம்மாநில பாஜக திட்டமிட்டது. அதன்படி இன்று அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று (அக்.16) புதிய அமைச்சரவை அமைக்க ஏதுவாக பழைய அமைச்சர்கள் மொத்தமாகப் பதவி விலகினர். அவர்களது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக் கொண்ட நிலையில், இன்று புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டது. அதன்படி குஜராத் அமைச்சரவை விரிவாக்கப்பட்டுள்ள நிலையில் 25 அமைச்சர்கள் தற்போது பதவியேற்றுள்ளனர்.
குஜராத் தலைநகர் காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடந்தது. இதில் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத் புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் ஆகியவற்றைச் செய்து வைத்தார். இந்த முறை குஜராத் அமைச்சரவை புதியவர்கள் பலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கிரிகெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா புதிய அமைச்சராக பதவியேற்றார்.
முன்னாள் அமைச்சர்கள் பலருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாநில உள்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷ் சங்கவி துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். அதேபோல் ருஷிகேஷ் படேல், கனுபாய் தேசாய், குன்வார்ஜி பவாலியா, பிராஃபுல் பன்செரியா, பர்சோத்தம் சோலங்கி ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். குஜராத்தின் இந்தப் புதிய அமைச்சரவையில் 19 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர். பதவியேற்பு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்றார்.