கோப்புப்படம் 
இந்தியா

இதுவே முதல்முறை: பாஜக தேசியத் தலைவராக பெண் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு!

மக்களவை தேர்தலுக்குப் பிறகு புதிய தேசியத் தலைவர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓராண்டு கடந்தும் ஜே.பி. நட்டா தலைவராக நீடிக்கிறார்.

ராம் அப்பண்ணசாமி

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசியத் தலைவராக அக்கட்சியைச் சேர்ந்த பெண் தலைவர் ஒருவரை நியமிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போதைய பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் கடந்த ஜனவரி 2023-ல் நிறைவடைய இருந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்காக ஜூன் 2024 வரை அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

புதிய அரசு அமைந்தவுடன் புதிய தேசியத் தலைவர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓராண்டு கடந்தும் ஜே.பி. நட்டா தலைவராக நீடிக்கிறார். தேசியத் தலைவர் தேர்வு தொடர்பாக பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். இடையே நிலவிவரும் கருத்துவேறுபாடால், நியமனம் தள்ளிப்போவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன் பாஜகவின் பெண் தலைவர்களில் ஒருவர் அக்கட்சியின் புதிய தேசியத் தலைவராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதில் பெண் வாக்காளர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இதன் அடிப்படையிலும், அடுத்தடுத்து நடைபெறவுள்ள பல மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களைக் கருத்தில்கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆந்திரப் பிரதேச எம்.பி.யும், அம்மாநில பாஜக முன்னாள் தலைவருமான புரந்தேஸ்வரி மற்றும் பாஜக தேசிய மகளிரணித் தலைவியும் எம்.எல்.ஏ.வுமான வானதி ஸ்ரீனிவாசன் ஆகிய மூவரின் பெயர் இதற்கான பரிசீலனையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.