அமித் ஷா, ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி. (கோப்புப்படம்) ANI
இந்தியா

நன்கொடையாக ரூ. 6,654 கோடியைப் பெற்ற பாஜக: காங்கிரஸ் பெற்றது எவ்வளவு? | Electoral Fund | BJP |

முந்தைய நிதியாண்டில் பாஜக நன்கொடையாகப் பெற்ற தொகை ரூ. 3,967 கோடி.

கிழக்கு நியூஸ்

2024-25 நிதியாண்டில் மட்டும் பாஜக ரூ. 6,654.93 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது.

இதே ஆண்டில் தான் மக்களவைத் தேர்தல் உள்பட பல்வேறு தேர்தல்கள் நடைபெற்றன.

கடந்த நிதியாண்டில் நன்கொடையாகப் பெற்ற விவரங்களை பாஜக டிசம்பர் 8 அன்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. ரூ. 20,000-க்கு மேல் நன்கொடையாகப் பெற்ற விவரங்களை தேர்தல் ஆணையம் தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதன்படி ஏப்ரல் 1, 2024 முதல் மார்ச் 30, 2025 காலகட்டத்தில் மொத்தம் ரூ. 6,654.93 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது பாஜக. இந்தக் காலகட்டத்தில் தான் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஆந்திரப் பிரதேசம், ஒடிஷா, ஜம்மு-காஷ்மீர், ஹரியாணா, ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரம் மற்றும் தில்லி ஆகிய இடங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

முந்தைய நிதியாண்டில் பாஜக நன்கொடையாகப் பெற்ற தொகை ரூ. 3,967 கோடி. இத்துடன் ஒப்பிடும்போது பாஜக நன்கொடையாகப் பெற்ற தொகை சுமார் 68 சதவீதம் அதிகரித்துள்ளது. ப்ரூடென்ட் எலெக்டோரல் அறக்கட்டளை மூலம் ரூ. 2,180 கோடி பெற்றுள்ளது. பிரோக்ரெஸிவ் எலெக்டோரல் அறக்கட்டளை ரூ. 757 கோடியை நன்கொடையாகக் கொடுத்துள்ளது. ஏபி ஜெனரல் எலக்டோரல் அறக்கட்டளையிடமிருந்து ரூ. 606 கோடியைப் பெற்றுள்ளது. நியூ டெமாக்ரடிகல் எலெக்டோரல் அறக்கட்டளை மூலம் ரூ. 150 கோடியைப் பெற்றுள்ளது பாஜக.

மற்ற அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 2023-24 நிதியாண்டில் காங்கிரஸ் பெற்ற நன்கொடை ரூ. 1,129 கோடி. 2024-25-ல் ரூ.522.13 கோடியை மட்டுமே காங்கிரஸ் பெற்றுள்ளது. இது 43 சதவீதம் சரிவு. திரிணமூல் காங்கிரஸ் முந்தைய நிதியாண்டில் ரூ. 618.8 கோடியை நன்கொடையாகப் பெற்ற நிலையில், தற்போது ரூ. 184.08 கோடியாகச் சரிந்துள்ளது.

பாரத ராஷ்ட்ர சமிதி கட்சி முன்பு ரூ. 580 கோடியைப் பெற்ற நிலையில், தற்போது வெறும் 15.09 கோடியை மட்டுமே பெற்றுள்ளதாகப் பதிவு செய்துள்ளது.

பாஜகவுக்கு நன்கொடை கொடுத்ததில் முதல் 10 இடங்களில் இருப்பவை

  1. ப்ரூடென்ட் எலெக்டோரல் அறக்கட்டளை - ரூ. 2,180.7 கோடி

  2. பிரோக்ரெஸிவ் எலெக்டோரல் அறக்கட்டளை - ரூ. 757 கோடி

  3. ஏபி ஜெனரல் எலக்டோரல் அறக்கட்டளை - ரூ. 606 கோடி

  4. நியூ டெமாக்ரடிகல் எலெக்டோரல் அறக்கட்டளை - ரூ. 150 கோடி

  5. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா - ரூ. 100 கோடி

  6. ருங்க்தா குழுமம் - ரூ. 95 கோடி

  7. பஜாஜ் குழுமம் - ரூ. 74 கோடி

  8. ஐடிசி குழுமம் - ரூ. 72.5 கோடி

  9. ஹீரோ என்டர்பிரைஸ் - ரூ. 70 கோடி

  10. வேதாந்தா குழுமம் - ரூ. 65 கோடி

காங்கிரஸுக்கு நன்கொடை கொடுத்ததில் முதல் 10 இடங்களில் இருப்பவை

  1. ப்ரூடென்ட் எலெக்டோரல் அறக்கட்டளை - ரூ. 216.3 கோடி

  2. பிரோக்ரெஸிவ் எலெக்டோரல் அறக்கட்டளை - ரூ. 77.3 கோடி

  3. செஞ்சூரி பிளைவுட்ஸ் (இந்தியா) லிமிடெட் - 26 கோடி

  4. ஐடிசி லிமிடெட் - ரூ. 15.5 கோடி

  5. ஏபி ஜெனரல் எலக்டோரல் அறக்கட்டளை - ரூ. 15 கோடி

  6. கோடக் குழுமம் - ரூ. 10 கோடி

  7. ஹிந்துஸ்தான் ஸிங்க் லிமிடெட் - ரூ. 10 கோடி

  8. தி சந்தூர் மேங்கனீஸ் & அயர்ன் ஓர்ஸ் - ரூ. 9.5 கோடி

  9. ராஜீவ் கௌடா - ரூ. 4.2 கோடி

  10. டிரைவ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் - ரூ. 4 கோடி

Electoral Funding | BJP | Political Donor | Political Fund | Congress | Election Commission |