மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணியும், ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலை வகிக்கின்றன.
நாடு முழுவதும் கடும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகியவை அடங்கிய மஹாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) அடங்கிய மஹா விகாஸ் அகாதி கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவியது.
மஹாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆளும் மஹாயுதி கூட்டணி 218 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பிற்பகல் 1 மணி நிலவரம்: மஹாயுதி கூட்டணியின் வெற்றி/முன்னணி நிலவரம்
பாஜக 127,
சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) 54,
தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) 38.
எதிர்க்கட்சிகளைக் கொண்ட மஹா விகாஸ் அகாதி கூட்டணி 58 இடங்களில் முன்னிலை பெற்று, பின்தங்கியுள்ளது.
பிற்பகல் 1 மணி நிலவரம்: மஹா விகாஸ் அகாதி கூட்டணியின் வெற்றி/முன்னணி நிலவரம்
காங்கிரஸ் 19
தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) 13
சிவசேனா (உத்தவ் தாக்கரே) 19
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளைக் கொண்ட இண்டியா கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகள் அடங்கிய பாஜக தலைமையிலான கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவியது.
ஜார்க்கண்ட் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி பாஜக, இண்டியா என இரு கூட்டணிகளும் மாறி மாறி முன்னிலை வகித்தன.
இந்நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி, 50 இடங்களில் முன்னிலை வகிக்கிறது இண்டியா கூட்டணி, அதேநேரம் 30 இடங்கள் பெற்று பின் தங்கி உள்ளது பாஜக கூட்டணி.