இந்தியா

வயநாடு மக்களை ஏமாற்றிய ராகுல்: பாஜக தலைவர்கள் விமர்சனம்

கிழக்கு நியூஸ்

வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததன் மூலம், அந்தத் தொகுதி மக்களை ராகுல் காந்தி ஏமாற்றிவிட்டதாக பாஜக தலைவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் ராய் பரேலியில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். 14 நாள்களில் ஏதேனும் ஒரு தொகுதியின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது.

இதன்படி, எதிர்பார்த்ததைப்போல வயநாடு தொகுதியின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி நேற்று அறிவித்தார். மேலும், வயநாடு தொகுதியில் தான் இல்லாத உணர்வு மக்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக தனக்குப் பதில் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும் ராகுல் காந்தி அறிவித்தார்.

வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததற்கு பாஜக தலைவர்கள் ராகுல் காந்தியை விமர்சித்து வருகிறார்கள்.

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியதாவது:

"நாட்டில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் பிரியங்கா காந்தி போட்டியிடலாம். ஆனால், காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவின் மூலம் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ராய் பரேலியில் தான் போட்டியிடுவதை வயநாடு வாக்காளர்களிடமிருந்து ராகுல் காந்தி மறைத்துவிட்டார்.

ராகுல் காந்தி மக்களை ஏமாற்றிவிட்டார். ராகுல் காந்தி மீது நம்பிக்கை வைத்து, மக்கள் அவருக்கு மீண்டும் வாய்ப்பளித்தார்கள். ஆனால், அவர் கைகழுவிவிட்டு ராய் பரேலி செல்கிறேன் என்கிறார். இது வயநாடு மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம். பிரியங்கா காந்தி முதன்முதலாக தேர்தல் அரசியலில் களமிறங்குகிறார். முஸ்லிம் லீக் ஆதரவு அவருக்கு இருப்பதால், அவர் வெற்றி பெறுவத மிகவும் எளிதானது" என்றார் ராஜீவ் சந்திரசேகர்.

முரளீதரன் கூறியதாவது:

"ஒட்டுமொத்த கேரளத்தையும் அவமதிக்கும் செயல் இது. குறிப்பாக வயநாடு மக்களை அவமதிக்கும் செயல். தற்போது ராகுல் காந்திக்குப் பதில் பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிடுகிறார். அமேதியும், ராய் பரேலியும் அவர்களுடையக் குடும்பத் தொகுதியாக இருந்தது. தற்போது வயநாடும் அவர்களுடையக் குடும்பத் தொகுதியாக மாறியுள்ளது. பிரியங்கா காந்திக்கும் கேரளத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. பிறகு ஏன் அவர் வயநாட்டில் போட்டியிட வேண்டும்" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.