இந்தியா

ஒடிஷா முதல்வராகப் பதவியேற்றார் மோகன் சரண் மாஜி

கிழக்கு நியூஸ்

ஆளுநர் ரகுபர் தாஸ், மோகன் சரண் மாஜிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஒடிஷா முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதறகாக பிரதமர் நரேந்திர மோடி புவனேஸ்வர் வந்தார். இவரை ஆளுநர் மற்றும் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட மோகன் சரண் மாஜி ஆகியோர் விமான நிலையம் சென்று வரவேற்றார்.

பிரதமர் மோடி தவிர்த்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, ஹரியாணா முதல்வர் நாயப் சிங் சைனி, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்கள். 24 ஆண்டுகளாக ஒடிஷா முதல்வராக இருந்த பிஜு ஜனதா தளத் தலைவர் நவீன் பட்நாயக்கும் பதவியேற்பு விழா மேடையில் இருந்தார்.

ஆளுநர் ரகுபர் தாஸ் பதவிப் பிரமாணம் செய்து வைக்க நான்காவது முறையாக எம்எல்ஏ-வாக தேர்வாகியுள்ள மோகன் சரண் மாஜி, ஒடிசா முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வர்களாகத் தேர்வான கேவி சிங் தேவ் மற்றும் பிரவாதி பரீடா ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டார்கள். இவர்களுடன் 13 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டார்கள்.

இதன்மூலம், ஒடிஷாவின் மூன்றாவது பழங்குடியின முதல்வராகியுள்ளார் மோகன் சரண் மாஜி. ஒடிஷாவில் அமையும் முதல் பாஜக அரசு இது.