ANI
ANI
இந்தியா

இளைஞர்களுக்கே எனது முன்னுரிமை: பிரதமர் மோடி

கிழக்கு நியூஸ்

மக்களவைத் தேர்தலுக்கான தீர்மானங்களில் இளைஞர்களுக்கான அம்சங்கள் என்னென்ன இடம்பெற வேண்டும் என்பதைப் பகிரலாம் என பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்கள் மத்தியில் உரையாற்றினார்.

2024 மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்கியுள்ள பாஜக, பிரதமர் நரேந்திர மோடியைத் தேர்வு செய்வோம் என்கிற முழக்கத்தை முன்வைத்துள்ளது. பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரது முன்னிலையில் இந்தப் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.

முதல்முறை வாக்காளர்களுக்கான மாநாட்டில் கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவைப் பிரதமர் மோடி எப்படி நனவாக்கினார் என்பதை விளக்கும் வகையில் பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டது.

இதில் காணொளி வாயிலாகக் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:

"இன்று உலகளவில் இந்தியாவின் பெருமை மிளிர்கிறது. உலகத் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்தும்போது, அது மோடி கிடையாது. 140 கோடி இந்திய மக்களின் பிரதிநிதி. இந்தியா முன்னெப்போதும் இல்லாததைவிட தற்போது மிகவும் வலிமையுடன் உள்ளது. இதுதான் பெரும்பான்மை அரசின் பலம்.

10-12 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் நிலவி வந்த சூழல்கள் இந்தியாவின் எதிர்காலத்தை இருளாக்கியது. அப்போது நிலவிய சூழல்கள் குறித்து உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 2014-க்கு முன்பிருந்த தலைமுறையினர், இன்று நாம் பேசிக்கொண்டிருக்கும் விஷயங்களின் சாத்தியக்கூறுகள் மீதிருந்த நம்பிக்கையை இழந்தவர்கள். ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது.

2047-க்குள் வளர்ந்த இந்தியா என்கிற இலக்கை நோக்கி நாடு நகர்ந்துகொண்டிருக்கும் நேரத்தில், இதற்கான பாதையை உங்களுடைய வாக்குகள் தான் தீர்மானிக்கும்.

இந்திய இளைஞர்களே எனது பாரத அமைப்பில் இணையுங்கள். மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவினுடைய தீர்மானங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உங்களுடைய பார்வைகளை நமோ செயலி மூலம் பகிருங்கள். குறிப்பாக இளைஞர்களுக்காக என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதைக் கூறுங்கள்" என்றார் பிரதமர் மோடி.