ANI
இந்தியா

நம்மைத் தெருவுக்குக் கொண்டு வருவதே பாஜகவின் திட்டம்: அரவிந்த் கெஜ்ரிவால்

கிழக்கு நியூஸ்

ஆம் ஆத்மியின் முக்கியத் தலைவர்களைக் கைது செய்யும் பாஜக, அடுத்து வங்கிக் கணக்குகளை முடக்கி நம்மைத் தெருவுக்குக் கொண்டு வருவார்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்கள் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் பிணையில் வெளியே வந்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக ஜூன் 1 வரை பிணை வழங்கப்பட்டுள்ளது. மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் இன்னும் சிறையில் உள்ளார்கள்.

இந்த நிலையில், ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் நேற்று தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மியின் முக்கியத் தலைவர்களுடன் பாஜக அலுவலகம் வருகிறேன், யாரை வேண்டுமோ கைது செய்து கொள்ளுங்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விட்டார்.

இதன்படி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இந்தப் போராட்டத்துக்கு முன்பு கெஜ்ரிவால் பேசியதாவது:

"ஆம் ஆத்மி பெரிதளவில் வளர்ந்துவிடும், அது அவர்களுக்கு சவாலானதாக மாறிவிடும் என்பதால் ஆம் ஆத்மியை ஒடுக்குவதற்கான திட்டத்தை பாஜக தொடங்கியுள்ளது.

இதன்படி, ஆம் ஆத்மியின் முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள். கைது செய்யப்பட்டு வருகிறார்கள். வரும் நாள்களில் ஆம் ஆத்மியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்.

தேர்தல் முடிந்தவுடன் ஆம் ஆத்மியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என அமலாக்கத் துறையின் வழக்கறிஞர் ஏற்கெனவே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். வங்கிக் கணக்குகள் தற்போது முடக்கப்பட்டால், அது ஆம் ஆத்மிக்கு சாதகமான உணர்வை மக்கள் மனதில் ஏற்படுத்தும் என்றார் வழக்கறிஞர்.

தேர்தலுக்குப் பிறகு நமது வங்கிக் கணக்குகளை முடக்குவார்கள். அலுவலகங்கள் முடக்கப்பட்டு, நாம் தெருவுக்குக் கொண்டு வரப்படுவோம். பாஜக கொண்டுவந்துள்ள 3 திட்டங்கள் இவைதான்.

2015-ல் நான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பாஜக எத்தனை குற்றச்சாட்டுகளை எழுப்பினார்கள்? தற்போது மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறுகிறார்கள். முறைகேடு நடந்திருக்கிறது என்றால், அந்தப் பணம் எங்கே என மக்கள் கேட்கிறார்கள்?. மற்ற இடங்களில் சோதனைகள் மேற்கொண்டபோது, பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், இங்கு எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. போலி வழக்குகளைப்போட்டு கைது செய்து வருகிறார்கள்" என்றார் அரவிந்த் கெஜ்ரிவால்.