கரூரில் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் நடைபெற்ற கூட்டநெரிசல் உயிரிழப்புகள் குறித்து ஆராய தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் எம்.பி.க்கள் குழு அமைத்து பாஜக உத்தரவிட்டுள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை மக்களைச் சந்திக்கும் பிரசாரக் கூட்டத்தை மேற்கொண்டார். அப்போது கூட்டநெரிசல் ஏற்பட்டதில் பலருக்கு மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இதுவரை மொத்தம் 41 பேர் உயிரிழந்துள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
தமிழ்நாடு அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த இரு நாள்களாக விசாரணையை நடத்தி வருகிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் பேசி நிலைமை குறித்து கேட்டறிந்ததாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசிடமிருந்து அறிக்கை கோரியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், விஜயின் பிரசாரக் கூட்டத்தில் நிகழ்ந்த கூட்டநெரிசலின் பின்னணி குறித்து ஆராய தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு அமைத்து பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார்.
ஹேமா மாலினி தலைமையிலான இந்தக் குழுவில் அனுராக் தாக்குர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, சிவசேனையைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஷிண்டே, தெலுங்கு தேசத்தின் புட்டா மகேஷ் குமார் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.
பாஜக தேசியப் பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டு உயிரிழந்தவர்களுக்கு பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா இரங்கல் தெரிவித்துள்ளார்.
கரூர் சென்று இச்சம்பவத்துக்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து விரைவில் அறிக்கையைத் தாக்கல் செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜெ.பி. நட்டா ஒரு குழுவை அமைத்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Karur | Karur Stampede | BJP | NDA Delegation | Hema Malini | JP Nadda | TVK Vijay | Vijay |