பிஹார் சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
பிஹாரில் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தலில் 121 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டத்தில் 122 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆகியவை பிரதானமாகக் களத்தில் உள்ளன. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 17 அன்று நிறைவடையும் நிலையில் தொகுதிப் பங்கீட்டிலும் வேட்பாளர்களை அறிவிப்பதிலும் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.
அதனடிப்படையில் கடந்த அக்டோபர் 12 அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் முடிவில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை தலா 101 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) - 29 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா 6 தொகுதிகளிலும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 6 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று முடிவுசெய்யப்பட்டது.
இந்நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதில் 71 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தாராபூர் தொகுதியிலும், மற்றொரு துணை முதல்வரான விஜய் குமார் சின்ஹா, லக்கிசராய் தொகுதியிலும் போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. பேட்டியா தொகுதியில் போட்டியிடும் கால்நடை மற்றம் மீன்வளத்துறை அமைச்சரான ரேணு தேவி உட்பட 6 அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பட்டியலில் 9 பெண் வேட்பாளர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால், பிஹார் சபாநாயகர் நந்த் கிஷோர் யாதவின் பெயர் முதற்கட்ட பட்டியலில் இடம்பெறவில்லை.