இந்தியா

மோடி, ராகுல் பேச்சுக்கு நோட்டீஸ்: பதிலளிக்க அவகாசம் கோரும் கட்சிகள்!

கிழக்கு நியூஸ்

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இரு கட்சிகள் சார்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதம், சாதி, வகுப்பு அல்லது மொழியின் அடிப்படையில் பிரிவினை உண்டாக்கி வெறுப்புணர்வைப் பரப்புவதாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், ராகுல் காந்தி மீது பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவும் தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்தார்கள். இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுத்துள்ள தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரது பேச்சு குறித்து ஏப்ரல் 29 காலை 11 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று பாஜக மற்றும் காங்கிரஸுக்கு உத்தரவிட்டது.

வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்களின் நடத்தைக்கு அரசியல் கட்சிகள்தான் பிரதான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

தேர்தல் ஆணையம் வழங்கிய அவகாசம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், இரு கட்சிகள் சார்பில் நேரம் கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நோட்டீஸ் குறித்து பதிலளிக்க பாஜக தரப்பில் ஒரு வாரம் அவகாசம் கோரப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கூடுதலாக 14 நாள்களை அவகாசமாகக் கோரியுள்ளது.

நாட்டில் வறுமை அதிகரிப்பதாகத் தவறான தகவல்களை ராகுல் காந்தி தெரிவித்து வருவதாகவும், மொழி அடிப்படையில் வடக்கு - தெற்கு என்று தொடர்ந்து பிரிவினையை உண்டாக்கி வருவதாகவும் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.