இந்தியா

பாஜக & காங்கிரஸ்: கூட்டணிக் கட்சிகள் அதிகம் உதவியது யாருக்கு?

ராம் அப்பண்ணசாமி

இந்தத் தேர்தலில் 400 க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடியாகப் போட்டியிட்ட பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. அறுதிப் பெரும்பான்மைக்கு 273 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், அதற்கு 33 இடங்கள் குறைவாகவே பாஜகவுக்குக் கிடைத்தது. பாஜகவின் கூட்டணி கட்சிகளுக்கு 53 இடங்கள் கிடைத்துள்ளதால் மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்க இந்த கட்சிகளின் தயவு பாஜகவுக்குத் தேவைப்படுகிறது.

இவற்றில் தெலுங்கு தேசம் (16 இடங்கள்), ஐக்கிய ஜனதா தளம் (12 இடங்கள்), சிவசேனா - ஏக்நாத் ஷிண்டே அணி (7 இடங்கள்), லோக் ஜன சக்தி (5 இடங்கள்), என இந்த நான்கு கட்சிகளின் ஆதரவுடன் எந்த சிக்கலும் இல்லாமல் மத்தியில் அடுத்த 5 ஆண்டு கால ஆட்சியை பாஜக நிறைவு செய்யமுடியும்.

இந்த நான்கு கட்சிகளில் சிவசேனாவும், லோக் ஜன சக்தியும் பாஜகவை மீறி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் மற்ற இரு கட்சிகளின் தலைவர்களான சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் மத்திய அமைச்சரவையில் தங்களுக்குத் தேவைப்பட்ட இடங்கள், துறைகள் பற்றி பாஜகவுக்கு நிபந்தனைகள் விதிக்க ஆரம்பித்துள்ளனர். இதன் முடிவு இன்னும் சில தினங்களில் தெரியும்.

மிக முக்கியமாக இந்த முறை கேரளாவில் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ள பாஜக அங்கு தன் வாக்கு வங்கியை கணிசமான அளவில் உயர்த்தியுள்ளது. மேலும் ஒடிஷாவில் 20 இடங்கள் கிடைத்தது பாஜகவினரே எதிர்பார்க்காத ஒரு முடிவு.

வடகிழக்கு மாநிலங்களில் பாஜக கூட்டணிக்கு மணிப்பூர், நாகலாந்து தவிர வேறு எங்கும் பெரிதாக எதிர்ப்பு இல்லை. ஆனால் குஜராத் மாநிலத்தில் ஒரு இடத்தில் வெற்றி பெற்று பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது காங்கிரஸ்.

மத்திய பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் அனைத்து இடங்களையும் பாஜக அள்ளியது. ஆனால் உத்தரப்பிரதேசத்தில் 33 இடங்கள் மட்டுமே பாஜகவுக்குக் கிடைத்துள்ளது. எனவே உத்தரப்பிரதேசத்தில் பாஜக கட்சி தங்களின் ஆட்சியை சுயபரிசோதனை செய்து கொள்வது மிக அவசியம்.

இண்டியா கூட்டணி:

கடந்த இரு மக்களவைத் தேர்தல்களை ஒப்பிடும்போது இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதியில் ஏறத்தாழ பாதி இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றிபெற்றது.

28 மக்களவை இடங்களைக் கொண்ட கர்நாடக மாநிலத்தில், கடந்த வருடம்தான் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி. ஆனால் இந்த முறை 9 மக்களவை இடங்கள் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்துள்ளது. அதிலும் தலைநகர் பெங்களூருவில் எந்த தொகுதியும் காங்கிரஸுக்குக் கிடைக்கவில்லை.

ஹரியானா, பஞ்சாப் மாநிலத்தில் கூட்டணி இல்லாமல் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி. ஆனால் மத்திய பிரதேசத்தில் கடந்த முறை பெற்ற ஒரு இடத்தையும் காங்கிரஸ் இந்த முறை இழந்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அங்கிருந்த காங்கிரஸ் கட்சியினர் சாரை சாரையாக பாஜகவுக்குச் சென்றது அப்போது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் தொடர் வெற்றியைத் தடுத்து நிறுத்தக் காரணமாக இருந்த சமாஜ்வாதி கட்சி அங்கே 37 இடங்களில் வெற்றி பெற்று மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த முறை சமாஜ்வாதியின் உதவியுடன் அமேதி தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி.

இண்டியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும் தொகுதிப் பங்கீடு மேற்கொள்ளாமல் தனித்துப் போட்டியிட்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 29 இடங்களில் வெற்றி பெற்றது. சந்தேஷ்காளி விவகாரத்தைத் தவறாகக் கையாண்ட காரணத்தால் திரிணாமூல் கட்சிக்கு குறைவான இடங்கள் கிடைக்கும் எனப் பலரும் ஆரூடம் சொன்னபோது அந்த கணிப்புகளை தவிடுபொடியாக்கி, கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் இந்த முறை வெற்றி பெற்றுள்ளது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி.

கடந்த தேர்தலிலும், இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் திமுகவுக்கு 22 இடங்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது இண்டியா கூட்டணி.

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் தங்களின் அரசியல் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 9 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இவர்களின் உதவியுடன் 13 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றி அம்மாநிலத்தின் மிகப்பெரும் கட்சியாகி உள்ளது காங்கிரஸ் கட்சி.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு இந்தத் தேர்தலில் 4 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. மிக முக்கியமாக இண்டியா கூட்டணிக்கு இந்த முறை பீஹாரில் 10 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 இடங்களும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கட்சிக்கு 2 இடங்களும் கிடைத்துள்ளன. இவற்றில் மிக முக்கியமாக ராஜஸ்தானிலிருந்து ஒரு மக்களவை உறுப்பினர் தேர்வாகியுள்ளார். மொத்தமாக இந்த தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள கம்யூனிஸ்ட்களுக்கு, கடந்த தேர்தலில் 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

இண்டியா கூட்டணியின் மற்றொரு பெரிய கட்சியான ஆம் ஆத்மி பஞ்சாபில் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. திஹார் சிறையில் இருந்து 21 நாள் ஜாமீனில் வெளிவந்து கெஜ்ரிவால் பரப்புரையில் ஈடுபட்டிருந்தாலும், டெல்லியில் காங்கிரஸ்-ஆம் ஆத்மி கூட்டணிக்கு எந்த இடமும் கிடைக்கவில்லை.

பிற கட்சிகள்:

ஆந்திர மாநிலத்தின் ஆட்சியை தெலுங்கு தேசம் கட்சியிடம் பறிகொடுத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் 4 இடங்கள் கிடைத்துள்ளன. கடந்த முறை மாநிலங்களவையில் பாஜகவுக்குப் பல மசோதாக்களை நிறைவேற்ற ஆதரவாக இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி இந்த முறை மக்களவையில் வெளியில் இருந்து பாஜகவுக்கு ஆதரவு கொடுக்க வாய்ப்புள்ளது.

கடந்த 17வது மக்களவைத் தேர்தலில் 4 சுயேச்சைகள் வெற்றி பெற்றனர், அதைவிட அதிகமாக இந்த முறை 7 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் இருவர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒருவர், லடாக்கில் ஒருவர் என இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் இருந்து 4 பேர் தேர்வாகியுள்ளனர்.

காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகள் 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு 53 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. 234 இடங்களுடன் எதிர்க்கட்சிகள் பலமாக உள்ளதால் இந்த முறை மக்களவையில் இருந்து வரப்போகும் செய்திகளில் சுவாரசியங்களுக்குப் பஞ்சமிருக்காது.